வாஸ்து பகவான் கதை-1

ஆதிகாலத்தில் வரங்கள் பலபெற்ற அண்டகாசூரன் என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் தேவர்களையும், முனிவர்களையும் அவர்களது பணிகளை செய்யவிடாது மிகுந்த தொல்லைகளையும், துன்பங்களையும் கொடுத்துவந்தான். ஒரு கட்டத்தில் அண்டகாசூரன் தான் பெற்றபல வரங்களினால் ஆணவம் கொண்டு எம்பெருமான் சிவனை தன்னுடன் போரிடவருமாறு அழைப்புவிடுத்தான். சிவபெருமானும் அண்டகாசூரனின் அழிவுகாலம் நெருங்கிவிட்டதை எண்ணி அவனது அழைப்பை ஏற்று அவனுடன் போரிட்டு அவனை வென்றுகிடத்தினார். சிவபெருமான் ஆண்டகாசூரனிடம் போரிடும்வேளையில் எம்பெருமான் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத்துளியானது பூமியின்மீதுபட்டவுடன் பூமியை பிளந்துகொண்டு அதிலிருந்து பூதம் ஓன்று ஜனனம் செய்தது. அந்த பூதமானது தோற்றத்தில் பூமிக்கும் வான்மண்டலத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தும்வகையில் மிகவும் பிரம்மாண்டமாகயிருந்தது. அந்த பூதமானது தனது அகோரப்பசியின் காரணமாக கண்ணில் தென்பட்ட அசுரசேனைகளையெல்லாம் விழுங்கியது. அண்டகாசூரன் மாண்டபிறகு அவனது உடலையும் விழுங்கியது.  அதன்பிறகும் பூதத்தின் பசி அடங்கவில்லை எனவே பூதமானது எம்பெருமான் சிவனிடம் தனது பசியினை போக்கி அருள்புரியுமாறு வேண்டிக்கேட்டுக்கொண்டது. சிவபெருமானும் பூதத்தின் வேண்டுதலின்படி அது விரும்பியதையெல்லாம் உண்ணக்கூடிய வரத்தினை அளித்துச்சென்றார். பூதம்பெற்ற வரத்தின் காரணமாக அது மூவுலகத்தினையும் அழிக்கும் சக்திபெற்றுயிருப்பதை உணர்ந்த தேவர்கள் பிரம்மதேவரிடம் முறையிட்டனர். அதன்பின்  பிரம்மதேவரின் அறிவுரைப்படி தேவர்கள் அந்த பூதத்தை பூமியினுள் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். இவ்வாறு செய்யும்போது எந்தெந்தத் தேவர்கள் அப் பூதத்தின் எப்பகுதியைப் பிடித்துக் கொண்டார்களோ அவர்களே உடலின் அப்பகுதிக்கு அதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள். தேவர்களின் இந்த செயலினாலும் தனது அகோரப்பசியினாலும் வேதனையடைந்த பூதமானது பிரம்மதேவரிடம் தன்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்குமாறு வேண்டியது. பிரம்மதேவன் பூதத்திடம் நீ மக்களால் வாஸ்து பகவான் என்று அழைக்கப்படுவாய் என்றும் பூமியினுள் படுத்திருந்து உன் கடமைகளை செய்யவேண்டும் என்றும் வருடத்தில் வெவ்வேறு மாதங்களில் குறிப்பிட்ட எட்டு நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் விழித்திருந்து, மக்கள் புதிதாக வீடு கட்டும்போது உன்னை பூஜித்து அவர்கள் அளிக்கும் பூஜை பிரசாத உணவுகளை உண்டு உன் பசியினை போக்கிக்கொண்டு அவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கி  நல்லாசி வழங்கும்படி வரம் அளித்ததாக புராணக்கதைகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாஸ்து பகவானின் தொப்புள் ஸ்தானத்தில் வேதகால முழுமுதற் கடவுளான பிரம்மதேவனும் மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் 45 தேவர்கள் அதிபதியாக இருந்து  வாஸ்து பகவானை வழிநடுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.                 

 வாஸ்து பகவான் கதை-2

ஆதிகாலத்தில் வரங்கள் பலபெற்ற அண்டகாசூரன் என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் தேவர்களையும் முனிவர்களையும்  அவர்களது பணிகளை செய்யவிடாது மிகுந்த தொல்லைகளையும்  துன்பங்களையும் கொடுத்துவந்தான். ஒரு கட்டத்தில் அண்டகாசூரன் பெற்றபல வரங்களினால் மூவுலகத்தினையும் அழிக்கும் சக்திபெற்றுயிருப்பதை உணர்ந்த தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காத்தருளுமாறு கேட்டுக்கொண்டதனால் சிவபெருமானும் அண்டகாசூரனின் அழிவுகாலம் நெருங்கிவிட்டதை எண்ணி அவனுடன் போரிட்டு அவனை வென்றுகிடத்தினார். சிவபெருமான் ஆண்டகாசூரனிடம் போரிடும்வேளையில் எம்பெருமான் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத்துளியானது பூமியின்மீதுபட்டவுடன் பூமியை பிளந்துகொண்டு அதிலிருந்து பூதம் ஓன்று ஜனனம்செய்தது. அந்த பூதமானது தோற்றத்தில் பூமிக்கும் வான்மண்டலத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தும்வகையில் மிகவும் பிரம்மாண்டமாகயிருந்தது. அந்த பூதமானது எம்பெருமான் சிவனின் கட்டளைக்காக காத்திருந்தது. சிவபெருமான் ஆண்டகாசூரனையும் அவனது சேனையையும் வீழ்த்தியபின் அந்த பூதத்தை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்தி பூமியினை சுத்தம் செயும்படி கட்டளையிட பூதமானது தனக்கிட்ட கட்டளையை செவ்வனே செய்து முடித்தது. பணியினை செய்து முடித்த பூதமானது மீண்டும் சிவபெருமானிடம் சென்று அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க சிவபெருமான் பூதத்திடம் நீ மக்களால் வாஸ்து பகவானாக என்று அழைக்கப்படுவாய் என்றும் மேலும் பூமியினுள் இருந்து வான்மண்டல ஆக்க சக்தியினை பெற்று பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ நீ அயராது உழைப்பாயாக என்றும் வரம் வழங்கிச்சென்றதாகவும் மேலும் வேதகால முழுமுதற் கடவுளான பிரம்மதேவனும் மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் 45 தேவர்கள் அதிபதியாக இருந்து  வாஸ்து பகவானை வழிநடுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. வாஸ்து பகவான்  சரியாக உத்ராயணகாலத்தில் (கோடைகாலத்தில்) பூமியின் மையத்தில் வடகிழக்கில் தலையையும், தென்மேற்கில் காலையும் வைத்துக்கொண்டு தனது வலது கையினை வாயு மூலையிலும், இடது கையினை அக்னி மூலையிலும் இருக்குமாறு வைத்துக்கொண்டு படுத்திருந்து தனது பணிகளை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒவ்வொரு மாதத்திலும் வெவ்வேறு திசைகளில் தலையை வைத்துக்கொண்டு படுத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வாஸ்து பகவான் வருடத்தில் வெவ்வேறு மாதங்களில் குறிப்பிட்ட எட்டு நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் எம்பெருமான் சிவனை பூஜைசெய்து வழிபாடு செய்வதாகவும், அவ்வாறு அவர் பூஜையை  செய்து முடிக்கும் வேளையில் புதிதாக கட்டிடங்கள் (வீடு) கட்டும்  மக்கள் வாஸ்து பகவானை நோக்கி பூஜைகள் செய்து அவரை வழிபடும்போது அவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கி  நல்லாசி வழங்குவதாக புராணக்கதைகளில் கூறப்பட்டுள்ளது.

வாஸ்து ஆலோசகர் & நிறுவனர் – கரிகாலன் கு

28-Sep-2019