பூமிநாதர் வாஸ்து

காலி மனை வாங்கும்போது கவனிக்கவேண்டய முக்கியக்குறிப்புகள்

  1. காலி மனையானது நான்கு செங்குத்தான (90°) மூலைகளைக் கொண்டதாக மட்டும் இருக்கவேண்டும். அதாவது காலி மனையானது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ மட்டும் இருக்கவேண்டும்.
  2. காலி மனையானது சரியான திசைகளை (திசைகாட்டும் கருவியில் 10º பாகைகளுக்கு மிகாமல்) கொண்டதாக இருக்கவேண்டும்.
  3. காலி மனையானது கட்டாயமாக தவறான தெருக்குத்துகளினால் பாதிக்கப்பட்டு இருக்ககூடாது.
  4. காலி மனையானது தெற்கிலும், மேற்கிலும் உயர்ந்த மலைகள், பழைய கோவில் கோபுரங்கள் கொண்டதாகவும், வடக்கிலும், கிழக்கிலும் ஆறு, குளம், ஏரிகள் கொண்டதாகவும் இருப்பது சிறப்பு. இதற்க்கு எதிர்மாறாக இருக்ககூடாது.
  5. காலி மனையானது தெற்கிலும், மேற்கிலும் சற்று மேடாகவும் வடக்கிலும், கிழக்கிலும் சற்று பள்ளமாகவும் இருப்பது சிறப்பு.
  6. காலி மனையானது கட்டாயமாக நல்ல சாலை வசதிகொண்டதாக இருக்கவேண்டும்.
  7. காலி மனையை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். மரங்கள்,முட்செடிகள், கற்கள் ஆகியவைகளை வேருடன் நீக்கி சுத்தம் செய்யவேண்டும். மேலும் காலி மனையை தெற்கிலிருந்து வடக்காகவும் மற்றும் மேற்கிலிருந்து கிழக்காகவும் சரிவாக இருக்கும்படியும் அமைத்துக்கொள்ளுதல் சிறப்பைத்தரும்.
  8. காலி மனையினை சுற்றி வேலிகள் அமைத்து, உச்சஸ்தானத்தில் நுழைவு வாயில்களை அமைத்துக்கொள்ளுதல் மிகவும் சிறப்பைத்தரும்.

வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டும்போது கவனிக்கவேண்டய முக்கியக்குறிப்புகள்

  1. கட்டப்படும் கட்டிடம் நான்கு செங்குத்தான (90°) வெளி மூலைகளைக் கொண்டதாக மட்டும் இருக்கவேண்டும். அதாவது கட்டப்படும் கட்டிடம் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ மட்டும் இருக்கவேண்டும்.
  2. கட்டப்படும் கட்டிடத்திற்கு கிழக்கிலும், வடக்கிலும் கட்டாயமாக காலியிடம் விட்டுக்கட்டவேண்டும் அது மேற்கைவிடவும், தெற்கைவிடவும் அதிகமாயிருப்பது சிறப்பு.
  3. கிழக்கிலும், வடக்கிலும் அதிகமான காலியிடம் விட்டுக்கட்டிடம் கட்டும்போது காலி மனையின் மத்தியபகுதியில் வீட்டின் வரவேற்பறையாக வருவதுபோன்று வரைபடம் தயார்செய்வது அவசியம். அதாவது காலி மனையின் பிரம்மஸ்தானத்தில் வீட்டின் வரவேற்பறையாக வருவதுபோன்று வரைபடம் தயார்செய்வது அவசியம்.
  4. கட்டப்படும் கட்டிடத்திற்கு தலைவாசல் காலி மனைக்கு உச்சஸ்தானத்தில் வருவதுபோல் வரைபடம் தயார்செய்ய வேண்டும்.
  5. கிழக்கிலும், வடக்கிலும் அதிகமான காலியிடம் விட்டுக்கட்டிடம் கட்டும்போது, கட்டிடம் காலி மனையின் அனைத்துப்பகுதி நடுக்கோட்டினையும் கட்டாயமாக ஆக்கிரமிக்கும்படியாக வரைபடம் தயார்செய்வது அவசியம், அவ்வாறு அமைக்காதபச்சத்தில் தலைவாசலை உச்சஸ்தானத்தில் அமைக்கமுடியாது.
  6. வீட்டினில் ஒரேயொரு படுக்கையறை மட்டும் அமைப்பதானால் அது கட்டாயமாக தென்மேற்குமூலையில்தான் இருக்கவேண்டும்.
  7. வீட்டினில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட படுக்கையறைகளை அமைப்பதானால் முதலில் தென்மேற்குமூலை படுக்கையறை, இரண்டாவதாக தெற்கு மற்றும் மேற்கு மத்தியப்பகுதிகளில் படுக்கையறைகள், மூன்றாவதாக வடமேற்குமூலை படுக்கையறை, நான்காவதாக வடக்கு மத்தியப்பகுதி மற்றும் கிழக்கு மத்தியப்பகுதி படுக்கையறையென்று திட்டமிடுதல் வேண்டும். மற்றப்பகுதிகளில் படுக்கையறைகள் அமைப்பதை தவிர்த்துவிடுதல் நன்று.
  8. வீட்டின் சமையலறையை தென்கிழக்கு அக்னி மூலையில் சமைப்பவர் கிழக்கு நோக்கி சமைப்பதுபோன்று அமைப்பது சிறப்பு. அவ்வாறு அமைக்கமுடியாதபச்சத்தில் வடமேற்கு வாயு மூலையில் சமைப்பவர் கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ சமைப்பதுபோன்று அமைக்கலாம்.
  9. வீட்டின் பூஜையறை வடகிழக்கு மூலையில் எட்டு அடிக்குறையாமல் வடக்கிலும், கிழக்கிலும் பெரிய ஜன்னல்களுடனும் பூஜையறையின் கதவுகள் உச்சஸ்தானத்தில் காற்று வந்துசெல்வதற்கு ஏதுவாக மணிகள் பொருத்தப்பட்ட துளைகளையுடையதாக இருப்பது மிகுந்த சிறப்பைத்தரும். அவ்வாறு அமைக்கமுடியாதபச்சத்தில் வடக்கு மத்தியப்பகுதில் அமைக்கலாம்.
  10. கழிவறைகள் கட்டிடத்தினுள் வடமேற்கு மூலையிலும், மேற்கு தாய்சுவரின் மத்தியபகுதியிலும் மட்டும்தான் அமைக்கவேண்டும். அவ்வாறு அமைக்கமுடியாதபச்சத்தில் தெற்கு தாய்சுவரின் மத்தியபகுதியில் அமைக்கலாம்.
  11. கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறுகள் வடகிழக்கு கிழக்கு அல்லது வடகிழக்கு வடக்கு உச்சப்பகுதிகளில் மட்டும்தான் தோண்டவேண்டும்.
  12. கீழ்நிலைத் தண்ணீர்தொட்டி வடகிழக்கு கிழக்கு அல்லது வடகிழக்கு வடக்கு உச்சப்பகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும்.
  13. மேல்நிலைத் தண்ணீர்தொட்டி கட்டிடத்தின்மேல் தென்மேற்கு பகுதியில் நீச்சபகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும்.
  14. கழிவுநீர்த்தொட்டி(செப்டிக்டேங்க்) கட்டிடத்தின் வடமேற்கு வடக்கு பகுதிகளில் தாய் மற்றும் தந்தை சுவர்களை தொடாதவாறு அமைக்கவேண்டும். அவ்வாறு அமைக்கமுடியாதபச்சத்தில் வடக்கு மற்றும் கிழக்கு முன்பக்க மத்தியபகுதியில் அமைக்கலாம்.
  15. கட்டப்படும் கட்டிடம் தென்மேற்கு பகுதிகளில் உயரமானதாகவும் வடகிழக்கு பகுதிகளில் உயரம் குறைவாக இருப்பதைப்போன்று திட்டமிடுதல் மிகுந்த சிறப்பைத்தரும்.
  16. போர்டிகோ அமைப்பதாகயிருந்தால் அதன் அகலம் பத்து அடிக்குமிகாமல் கிழக்கு முன்பகுதி முழுவதுமாக அல்லது வடக்கு முன்பகுதி முழுவதுமாக அல்லது கிழக்கு மற்றும் வடக்கு முன்பகுதியில் முழுவதுமாக அமைக்கலாம். மற்ற பகுதிகளில் போர்டிகோ அமைப்பதைத் தவிர்ப்பது நன்று. மேலும் எந்தத்திசையிலும் தாய் சுவர்களை துண்டிக்காது போர்டிகோ அமைக்கவேண்டும்.
  17. கட்டிடத்தின் வெளிப்பக்க மாடிப்படிக்கட்டுகள் வடமேற்கு வடக்கு மற்றும் தென்கிழக்கு கிழக்கு பகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும். மேலும் அதன் கீழ்ப்பகுதிகளில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அறைகளையும் அமைக்கக்கூடாது. தூண்களின் துணைகொண்டு மாடிப்படிக்கட்டுகள் அமைக்கலாம் அதனால் எந்தவொரு வாஸ்து குறைபாடும் ஏற்படாது.
  18. கட்டிடத்தின் உள்பக்க மாடிப்படிக்கட்டுகள் தெற்கு தாய்சுவரின் மத்தியபகுதியிலும் மேற்கு தாய்சுவரின் மத்தியபகுதியிலும் மட்டும்தான் அமைக்கவேண்டும். எந்தவொரு உள்மூலைகளிலும் மாடிப்படிக்கட்டுகளை அமைக்கக்கூடாது. உள்பக்க மாடிப்படிக்கட்டுகளின் கீழ்ப்பகுதிகளில் பூஜையறை, படுக்கையறை மற்றும் சாப்பாட்டறை தவிர்த்து கழிவறை பொருள்கள் சேமிக்குமறைகள் அமைக்கலாம்.
  19. மழைநீர் சேகரிக்கும் தொட்டியினை வடகிழக்கு கிழக்கு அல்லது வடகிழக்கு வடக்கு பகுதிகளில் அமைத்துக்கொள்ளுதல் சிறப்பைத்தரும்.
  20. வாகனங்கள் நிறுத்தும் கொட்டகையை வீட்டின் வடமேற்கு வடக்கு மற்றும் தென்கிழக்கு கிழக்கு பகுதிகளில் தாய் மற்றும் தந்தை சுவர்களை தொடாதவாறு நீச்சபகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும். ஆனால் அதற்காக அமைக்கப்படும் வாயிலானது உச்சப்பகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும்.
  21. வீட்டிற்கான மின் இணைப்பு பெட்டிகள் வீட்டின் வடமேற்கு வடக்கு மற்றும் தென்கிழக்கு கிழக்கு பகுதிகளில் அமைக்கவேண்டும் மற்றப்பகுதிகளில் மின் இணைப்பு பெட்டிகள் அமைப்பதை தவிர்த்துவிடுதல் நன்று.
  22. தெற்கிலும், மேற்கிலும் கட்டப்படும் மதில்சுவர்கள் உயரமாகவும் தடிமானதாகவும் இருப்பது சிறப்பைத்தரும். வடக்கிலும், கிழக்கிலும் கட்டப்படும் மதில்சுவர்கள் உயரம்குறைவாக இருக்கும்படி மதில்சுவர்களை கட்டவேண்டும்.
  23. கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ஜன்னல்கள் கட்டாயமாக இருக்கவேண்டும். மேலும் அவைகள் உச்சஸ்தானத்தில் இருக்கவேண்டும். மற்றும் எண்ணிக்கையில் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளின் ஜன்னல்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகஇருக்கவேண்டும்.
  24. விருந்தினர் அறைகள் மற்றும் கழிவறைகளை கட்டிடத்தின் வெளிப்பகுதிகளில் அமைப்பதாக இருந்தால் வடமேற்கு வடக்கு பகுதிகளில் தாய் மற்றும் தந்தை சுவர்களை தொடாதவாறு அமைக்கவேண்டும்.
  25. சமையலறையை கட்டிடத்தின் வெளிப்பகுதிகளில் அமைப்பதாக இருந்தால் தென்கிழக்கு கிழக்கு பகுதிகளில் தாய் மற்றும் தந்தை சுவர்களை தொடாதவாறு அமைக்கவேண்டும்.